அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 7 பில்லியன் ரூபா நிலுவையில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிட மிருந்து இதுவரையில் அரசுக்கு கிடைக்கவேண்டிய வரிப்பணத்தில் 07 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டி யுள்ளது.

நிலுவை வரிப்பணத்துக்கு பதிலாக அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு ஏதேனும் சட்ட ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை செய்யவும் அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘ஒரு வருடத்தில் 250-300 வரையான மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கி, அதனூடாக கிடைக்கப்பெறும் வருமானத்தினூடாக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மக்களின் வரிப்பணத்தினூடாக கிடைக்கும் ஓய்வூதிய வாழ்க்கையை முன்னெடுக்கும் நபரொருவர் இவ்வாறு பயபக்தியுடனான கருத்துகளை முன்வைப்பது பொருத்தமானதாக இருக்காது.

மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதில் சிக்கல் இல்லை.

அவ்வாறு அனுமதிப்பத்திரங்களை வழங்கி, அந்த மதுபானசாலைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை அறவிடுவதற்கு ரணில் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எனவே, மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி தீர்மானம் எடுத்தபோது தமக்கு நெருங்கிய நண்பர்கள் செலுத்தாமலிருந்த வரிப்பணத்தையும் சேகரிப்பதற்கும் தீர்மானம் எடுத்திருக்கலாம்.

அதேபோன்று, அவரின் அமைச்சரவையில் இருந்தவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மதுபான நிறுவனங்களிடமிருந்து கிடைக்கவேண்டிய வரிப்பணம் மாத்திரம் 07 பில்லியன் ரூபா வரையில் நிலுவையில் இருக்கிறது.

எனவே, அந்த நிலுவை வரிப்பணத்தை வசூலிக்கவே முயற்சிக்கிறோம், என தெரிவித்தார்.