திருகோணமலையில் திரண்ட மக்கள்

-மூதூர் நிருபர்-

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி நிகழ்வு இன்று புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் அனுசரணையில், கிழக்கு மாகாண சிவில் வலையமைப்பு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது திருகோணமலை சிவன் கோவிலடியில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி, குளக்கோட்டன் மண்டபத்தை சென்றடைந்தது.

பேரணியில் கலந்து கொண்டோர் சுலோகங்களையும் ஏந்தியிருந்ததோடு, கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, உண்மை மற்றும் பொறுப்பு கூறல், கூட்டுப்படுகொலைகளுக்கான நீதி, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் விடுதலை, பாதிக்கப்படட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கல், மீனவர்களுக்கான நிவாரணம் வழங்கல், பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கான தீர்வு, 76 வருட தேசிய இனப்பிரச்சிக்கான நிலையான அரசியல் தீர்வு போன்ற விடயங்களை உள்ளடக்கிய கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் இறுதியில் , குறித்த விடையங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக சிவில் அமைப்புகளினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்