மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும்

நாட்டில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் தெற்கு அந்தமான் தீவுக்கருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும்.

இதன்காரணமாக, அந்த கடற்பரப்புகளில் காற்று, மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது எதிர்வரும் 11ஆம் திகதியளவில் இலங்கை மற்றும் தமிழகத்தை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் தாக்கம் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 10ஆம் திகதியிலிருந்து மழை நிலைமை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்