அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு

நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடையும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அதன்படி, எட்டு இலட்சம் பேருக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் வறிய நிலையில் உள்ள நான்கு இலட்சம் மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்த 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எட்டு இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் 2025 மார்ச் 31 வரையிலும், மற்றொரு குழுக்களுக்கான கொடுப்பனவு 2024 டிசம்பர் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு நடைமுறைக்கு வரும் எனவும் பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று திங்கட்கிழமை அனுமதி கிடைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்