
மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு
-நானுஓயா நிருபர்-
வானிலை சீற்றத்தினால் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியதால் மரக்கறிகளும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் நுவரெலியாவில் மத்திய சந்தையிலும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களிலும் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 650 முதல் 750 ரூபா வரையிலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விற்பனை விலை 1200 முதல் 1300 ரூபா வரையிலும் உயர்ந்துள்ளதுடன் ஏனைய மரக்கறி வகைகளின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மத்திய சந்தைக்கு வரும் அதிகமானவர்கள் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதுடன் நுகர்வோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் இதனால் வியாபாரிகள் வியாபாரம் இன்றியும் பல மரக்கறிகள் இரண்டு மூன்று நாட்களின் பின் பழுதடைவதால் பாரிய நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பழுதடையும் பெருமளவிலான மரக்கறிகளை தினமும் குப்பையில் போட வேண்டியுள்ளதாக அவர்கள் அங்கலாய்ந்துக்கொள்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதுடன் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது மரக்கறிகள் நுகர்வோரின் தேவைக்கு ஏற்ற வகையில் விளைச்சல் இல்லாததால் காய்கறி விலை மேலும் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக நுவரெலியா மாவட்டத்தில் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
