பசுமாட்டை திருடி நூலகத்திற்குள் வைத்து இறைச்சியாக்கி விற்ற பொதுநூலக ஊழியர்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், மேச்சலுக்காக கட்டப்பட்ட பசு மாட்டைத் திருடி, பொது நூலகத்தில் வைத்து இறைச்சியாக்கி, விற்பனை செய்த பொதுநூலக ஊழியர் உட்பட்ட இருவர், அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு, சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை சாவகச்சேரி-நுணாவில் பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள காணியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட பசுமாடு காணாமல் போயுள்ளது.
இந்நிலையில், பசுவின் உரிமையாளரும், அப்பகுதி இளைஞர்களும் நேற்று வெள்ளிக்கிழமை பகல் தேடுதல் நடத்திய போது, நூலக மதிலுக்கு அருகில் பசுமாட்டின் தலை உட்பட்ட உடற் பாகங்களைக் கண்டுள்ளனர்.
இதையடுத்து, நூலகத்துக்குள் நுழைந்து பார்த்த பொழுது, நூலக குளியலறைக்குள் வைத்து பசுவினை இறைச்சியாக்கிய இரத்தக்கறைகளைக் கண்டுள்ளனர்.
நூலக ஊழியர் மீது சந்தேகமடைந்த இளைஞர்கள், ஊழியரை விசாரித்த பொழுது, இன்னொருவருடன் இணைந்து புதன்கிழமை கடமை நேரத்தில் மதியம் 1.00 மணியளவில் பசுவினை இறைச்சியாக்கியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இருவரையும் பிடித்த இளைஞர்கள், நூலகத்தை உடனடியாகவே மூடி சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இருவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.