வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரம்: 7 சடலங்கள் இதுவரை மீட்பு
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் உழவு இயந்திரம் ஒன்று அடித்து செல்லப்பட்டமையைத் தொடர்ந்து 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மாயமானார்கள்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அதே பகுதியில் உள்ள மின்கம்பத்தை பிடித்திருந்த நிலையில் 5 சிறுவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து காணாமல் போயுள்ள 6 சிறுவர்கள் உட்பட 8 பேரை மீட்கும் பணி நேற்று புதன் கிழமை இடம்பெற்ற நிலையில் இவர்களில் 4 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று வியாழக்கிழமை தொடர்ந்தும் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரத்தில் இருந்து காணாமல் போனவர்களில் இதுவரை 07 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது நேற்று புதன் கிழமை முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது – 16), அப்னான் (வயது-15), பாறுக் முகமது நாஸிக் (வயது – 15), சஹ்ரான் (வயது-15) ஆகிய 4 பேரின் சடலங்களும் மூன்றாவது நாளான இன்று வியாழக்கிழமை அலியார் முகமது யாசீன் (வயது-15), உழவு இயந்திர சாரதி உதுமாலெப்பை முகமது அகீத் (வயது-17), பொது மகன் கல்முனை புகை பரிசோதனை நிலைய ஊழியர் அஸ்மீர் ஆகிய 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ந்தும் கடற்படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.