
சீரற்ற வானிலை: பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த விபரம்
-பதுளை நிருபர்-
சிரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் பல வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .
இதேவேளை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் பதுளை மாவட்டத்தில் பல இடங்களில் 125 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகவும் பதுளை மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் இடம்பெயர்ந்து உள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
இதன் படி பதுளை பசறை பிரதான வீதியில் 3 ஆம் கட்டை மற்றும் 7 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீதியில் விழுந்தமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அவ்விடத்தில் ஒற்றை வழி போக்குவரத்து இடம்பெறுகிறது .
இதேவேளை பதுளை பண்டாரவளை வீதி ஹாலிஎல உடுவர 7 ஆம் கட்டை பால் சபைக்கு அருகாமையில் உள்ள பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீதியில் விழுந்தமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர் .
இருப்பினும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் குறித்த மண்மேட்டை அகற்றி அவ்வழி ஒற்றை வழி போக்குவரத்தாக இடம்பெறுகிறது.
பண்டாரவளையில் இருந்து ஹப்புத்தளை செல்லும் பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீதியில் விழுந்தமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து 3 மணிநேரம் தடைப்பட்டது.
மடுல்சீமையில் இருந்து மெட்டிக்காத்தன்ன செல்லும் வீதி, மெட்டிக்காத்தன்ன பகுதியில் தாழ் இறங்குவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பண்டாரவளை பிந்துனுவெவ ஜனதாபுர மாவத்தையில் வீடு ஒன்றின் மீது மதில் உடைந்து விழ்ந்ததில் 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளை நெளும் வெவ பிரதேசத்தில் வீடொன்றில் மீது மண்மேடு சரிந்து விழுந்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை,தாய், பிள்ளைகள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிமடை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கெட்ட கேல்ல தோட்டத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த சேவை நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பதுளை கொழும்பு பிரதான வீதி, மஹியங்கனை, எடம்பிடிய ,வெளிமடை, பசறை, மடூல்சீமை,எக்கிரிய,ஸ்பிரிங்வெளி, கரவெல, மதுவெல்பதன, அமுனுதோவ, வெவதென்ன, பனாகந்திய, சொரணாதொட,அம்பகஸ்தோவ,மீகஹகிவுல,கெட்ட வந்த ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தமையினால் மற்றும் கற்கள் சரிந்து வீதிகளில் விழுந்துள்ளமையினால்,மண்மேடு சரிந்து வீதிகளில் விழுந்துள்ளமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஹாலிஎல உடுவர பகுதியில் லயன் குடியிருப்புக்கு அருகாமையில் இடம்பெற்ற மண் சரிவினால் புகையிரத பாதையில் மண் நிரம்பியதால் பதுளைக்கான
புகையிரதப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தெமோதர ஸ்பிரிவெலி கபரவெல பகுதியில் பாரிய கற்பாறை சரிந்து வீதியில் விழுந்தமையினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறுகள் இன்றி தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலக செயலாளர் அபேவர்த்தன தெரிவித்தார்.
