இம்ரான்கானை விடுதலை செய்யக்கோரி தொடரும் ஆர்ப்பாட்டங்கள்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணிகளாக நேற்று முதல் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து தலைநகர் இஸ்லாமாத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகப் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை முடக்கியுள்ளனர்.

இஸ்லாமாத்தில் உள்ள சில நெடுஞ்சாலை போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் கையடக்க தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் இணையச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று ஆரம்பமான இந்த அணிவகுப்பு போராட்டக்காரர்களுக்கு எதிராக காவல்துறையினர் கண்ணீர்ப் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இது தவிர, நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்ரான் கானின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான புஷ்ரா பீபி பேரணியை வழி நடத்துபவர்களில் ஒருவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இம்ரான் கானுக்கு மூன்று வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை அவர் தொடர்ந்தும் மறுத்து வருகிறார்.

அதேவேளை, இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்கள், ராவல்பிண்டி சிறைச்சாலைக்குச் சென்று அவரை சந்தித்துள்ளனர்.

அவரின் விடுதலைக்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த விபரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் மற்றும் பேரணி என்பன சட்டவிரோதமானது என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.