போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற இந்திய பெண் இலங்கையில் கைது!

இந்தியப் பெண் ஒருவர், போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரான 24 வயதுடைய இந்திய பெண் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 03.30 மணியளவில் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தியப் பெண்ணின் கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேக நபரான இந்தியப் பெண் விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரான இந்தியப் பெண் தனது தந்தை மற்றும் நபரொருவருடன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்தியப் பெண்ணின் தந்தையும் மற்றைய நபரும் விமான நிலையத்தை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட பெண் உட்பட மூவரையும் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.