பதுளை-செங்கலடி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடை!

-பதுளை நிருபர்-
பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டைப் பகுதியில் மெத்தைக்கடைக்கு அருகாமையில்  மண்மேட்டுடன் பாரிய கற்கள் சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியினூடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை  அதிகாலை சுமார் 3.00 மணியளவில் கற்கள் உருண்டு விழும்  பாரிய சத்தம் கேட்டதாகவும் உடனே வீதிக்கு  வந்து பார்த்த போது கற்களினாலும் மண்மேட்டினாலும் மரங்களினாலும் வீதி மூடப்பட்டு காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
குறித்த மண் சரிவினால் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகளில் இரண்டு முச்சக்கர வண்டிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் ஒரு முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த அனர்த்தத்தின் போது உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
மேலும் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த வீதி புனரமைக்கப்பட்டு கொண்டிருந்த போது அவ்விடத்தில் பாரிய கல் ஒன்று வீதியில் விழுந்தது. குறித்த பகுதியில் கற்களை முழுமையாக அகற்றாமல் அவ்விடத்தில் ஒற்றை வழி போக்குவரத்தாகவே காணப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் 2021 ம் ஆண்டு மார்ச் மாதம் 20 ம் திகதி லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து அவ்விடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 40 ற்கு மேற்பட்டார் காயமடைந்து 14 பேர்  உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி கார் ஒன்று அவ்விடத்திலேயே விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று இடம்பெற்ற மண்சரிவினை அகற்றுவதற்கு ஓரிரு நாட்கள் செல்லும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வீதியின் ஊடாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
படல்கும்பர -புத்தலை ஊடாக வெள்ளவாய வீதியில் பெல்வத்தை சந்தியில் இருந்து பசறை நோக்கி வரும் வழியை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்படுகின்றது.