இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய அதிக எண்ணிக்கையிலான பெண்கள்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் ஊடாக இம்முறை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தேசிய மக்கள் சக்தி ஊடாக தெரிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்துக்கு அதிகளவு பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட ஆண்டுகளாக 1989, 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளைக் குறிப்பிடலாம்.

குறித்த வருடங்களில் தலா 13 பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர்.

அத்துடன், 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக 9 ஆவது நாடாளுமன்றத்துக்கு 12 பெண் பிரதிநிதிகள் தெரிவாகியிருந்தனர்.

இதனிடையே இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 21 பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசேகர ஆகியோர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலிருந்து தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ஹேமாலி குணசேகர நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

அதேநேரம், தேசிய மக்கள் சக்தி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நிலந்தி கொட்டஹச்சி, ஓஷனி உமங்கா ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட துஷாரி ஜயசிங்கவும் இம்முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

அத்துடன், குறித்த மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிட்ட சமிந்திராணி கிரியெல்லவும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

அதேநேரம், மாத்தளை மாவட்டத்திலிருந்து, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட தீப்தி வாசலகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோஹினி குமாரி கவிரத்னவும் தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அனுஷ்கா தர்ஷனி திலகரத்ன மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட ஹசாரா லியனகேவும், மாத்தறை மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

அதேநேரம் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட நிலுஷா லக்மாலி இரத்தினபுரி மாவட்டத்திலிருந்தும், சாகரிக்கா கங்காணி கேகாலை மாவட்டத்திலிருந்தும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து முது ரத்வத்தே, குருணாகல் மாவட்டத்திலிருந்து கீதா ஹேரத், புத்தளம் மாவட்டத்திலிருந்து ஹிருனி மதுஷா விஜேசிங்க மற்றும் மொனராகலை மாவட்டத்திலிருந்து சதுரி கங்காணி ஆகியோரும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட அம்பிகா சாமுவேலும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

குறித்த வெற்றியைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான ஹப்புத்தளை தோட்டத்தில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.