தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில நாட்களில் மாத்திரம் 35 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது மீனவர்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு பெரும் அபராதத் தொகைகளை இலங்கை நீதிமன்றங்கள் விதிக்கின்றன. மேலும், பல மாதங்கள் மீனவர்கள் சிறையில் இருக்க நேரிடுகிறது. இதனால், வாழ்வாதாரங்களை இழந்து கைதாகும் மீனவர்களின் குடும்பங்கள் தவிக்கும் சூழல் நிலவுவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.