பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சடலமாக மீட்பு

கொழும்பு – கொஸ்ஸின்ன பகுதியில் நேற்று திங்கட்கிழமை பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒய்வுபெற்ற ஆசிரியரான கிரிஷாந்த புலஸ்தி என்பவரே இவ்வாறு அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது கைகள் கட்டப்பட்டு, வாய் பிளாஸ்டரால் ஒட்டப்பட்டு அவர் அணிந்திருந்த சாரத்தால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வீட்டின் மின்சாரம் செயலிழந்துள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை இவரது மனைவியின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுக் காயங்களுடன் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்த அலுமாரிகள் திறந்திருந்ததாகவும் காணாமல் போன பொருட்கள் குறித்த தகவல்கள் அவரது மனைவியின் மூலமே பெற முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிர் இழந்தவரின் சடலம் கேகாலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரின் வீட்டிலிருந்த காரை எடுத்து சென்றுள்ளதாகவும் குறித்த கார் கேகாலை பிந்தெனிய என்ற இடத்தில் விட்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.