முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி, பணத்திற்காக முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, முகத்துவாரம், கெரவலப்பிட்டிய மற்றும் மாபோல பிரதேசங்களை சேர்ந்த 18 முதல் 22 வயதுக்குட்பட்ட 9 சாரதிகள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், 9 முச்சக்கர வண்டிகளும்  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் மாபொல பிரதேசத்தில் நீண்ட காலமாக இந்த பந்தய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பந்தயத்தினால் அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் றாகம பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.