மரத்திலிருந்து வீழ்ந்த கடைசி மாங்கனி நாங்கள், இதை விருட்சமாக்கிப் பாதுகாப்பது மக்கள் கையிலேயே உள்ளது!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் குருவிச்சையை வெட்டுங்கள் என்று மக்களிடம் கோரியிருந்தேன். மக்கள் அதைச் சரிவரச் செய்யவில்லை. அதன் விளைவு, அது முழு மரத்தையுமே விழுங்கிவிட்டது. அந்த மரத்திலிருந்து வீழ்ந்த கடைசி மாங்கனி நாங்கள். இதை விருட்சமாக்கிப் பாதுகாப்பது மக்கள் கையிலேயே இருக்கின்றது.
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாம்பழச் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் மூத்த வேட்பாளருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கைலாசபிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் நான் போட்டியிட்டேன். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் என்னிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. எமது கட்சியில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கின்றார். தமிழ்த் தேசிய நீக்கத்தில் ஈடுபடுகின்றார்.
பின்னர் எப்படி உங்கள் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பது என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு தெளிவான பதிலை வழங்கினேன். மரத்தில் குருவிச்சை இருந்தால் குருவிச்சையைத்தான் வெட்டவேண்டுமே தவிர, மரத்தையல்ல என்று பதிலளித்தேன்.
தமிழரசுக் கட்சி என்ற மரத்திலிருந்த குருவிச்சையை வெட்டச் சொல்லி கடந்த தேர்தலில் மக்களிடம் கோரினேன். மக்கள் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். எப்போதும் அசலை விட நகல் நல்லதுபோன்றுதான் தெரியும். அதனால்தான் என்னவோ மக்கள் குருவிச்சையை சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டார்கள்.
அதனால் இன்று அந்தக் குருவிச்சை மரத்தையே விழுங்கிவிட்டது. மரம் இருந்த தடம் தெரியாமல் குருவிச்சையே வியாபித்து நிற்கின்றது. அந்த மரத்திலிருந்து வீழ்ந்த கடைசி மாங்கனியே நாங்கள். இந்த மாங்கனி தமிழ் மக்கள் விரும்பும் மாற்றத்துக்கான விதையை வைத்திருக்கின்றது. இதை விருட்சமாக்கவேண்டியது மக்கள் பொறுப்பு.
மீண்டும் எங்கள் மக்களிடம் தாழ்மையாகக் கேட்பது ஒன்றுதான். 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இழைத்த தவறை மீண்டும் இழைக்கவேண்டாம். இம்முறையாவது உங்களுக்கு மரம் செழிப்பாக வளர்ந்து பலன் தரவேண்டும் என்றால், இந்த மாங்கனியின் விதையை விருட்சமாக்கவேண்டும். குருவிச்சைக்கு வாக்களிக்காமல், உங்கள் இதயத்திலிருக்கும் இந்த மாங்கனிச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் – என்றார்.
