அதிகரிக்கப்பட்ட உர மானியம் வழங்கும் திகதி அறிவிப்பு
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும், வாராந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு உர மானியத்தை அதிகரிப்பதற்குக் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியது.
இந்தநிலையில், கமநல சேவை திணைக்களம் மற்றும் பல விவசாய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவும் அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய, ஒரு ஹெக்டயர் நிலப்பரப்புக்கு 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட்ட உர மானியம், தற்போது 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெரும்போக நடவடிக்கைகள் அம்பாறையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தப் பகுதி விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாயும், பின்னர் எஞ்சிய 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
இந்த பணிகளுக்காக 2 பில்லியன் ரூபாய் அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்