
சம்மாந்துறையில் குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்
-கல்முனை நிருபர்-
வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இஸ்மாயில் புரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் குர்ஆன் ஓதுவிக்கும் நபர் ஒருவர் குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, 60 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த சிறுமியின் குதவழியுடாக தனது கைவிரலை பயன்படுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்திருப்பதாகவும், இதனால் இரத்தம் வெளியேறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
