
விமான நிலையத்தில் திருட்டு : ஊழியர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் விமான நிலைய ஊழியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணப் பொதிகள் சேமிப்பு பிரிவில் பணிபுரியும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடையவர் எனத் தெரியவருகின்றது.
சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பயணப்பொதிகளிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பெறுமதியான பொருட்கள் திருடப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நீண்ட நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
