
தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு – இராகவன் தெரிவிப்பு
அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக குற்றஞ்சாட்டிய மூத்த போராளி இராகவன் தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு என்றார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவிக்கையில்
தமிழ் பொது வேட்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள் குறுகிய நோக்கில் இனவாதத்தை பேசி தமது எதிர்கால அரசியலுக்கு திட்டமிடுகின்றனர். இன்று புலம்பெயர் நாடுகளில் செல்வ செழிப்போடு வாழ்பவர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக பணம் தாருங்கள் என புலம்பெயர் தமிழ் மக்களிடம் பணத்தைப் பெற்று அதனை கையகப்படுத்தி உள்ளனர்.
அவர்களுக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளனர். ஏனெனில் பிரச்சனை தீர்ந்து விட்டால் நிதி திரட்ட முடியாது தாங்கள் நினைத்தது போல் வாழ முடியாது என்ற அச்சத்தின் காரணமாக தற்போது பொது வேட்பாளரை நிறுத்தி இனவாத கருத்துக்களை பரப்புகின்றனர்.
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டதன் நோக்கம் ஆரம்பத்தில் சரியாக இருந்தாலும், பின்னர் புலம்பெயர் அமைப்புக்களின் வழிகாட்டலில் தவறான பாதையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கான நிதியினை வழங்கும் புலம்பெயர் புலிகள் என தம்மை அடையாளப்படுத்தும் புலிகள் காலத்தில் பணத்தை பதுக்கிய கும்பல் தற்போது பொது வேட்பாளருக்கு நிதியை வழங்குவதாக அறிகின்றோம்.
இவர்களது செயற்பாடுகளால் தெற்கில் குறைந்திருக்கும் இனவாதத்திற்கு உரம் போட்டுள்ளனர். தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா உதவும், சர்வதேசம் வரப்போகுது, இதனால் தமிழீழம் வரப்போகிறது என சொல்லி தெற்கில் பூதாகரமாக காட்டப்படும்.
எனவே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். ஆனால் தமிழ் பொது வேட்பாளர் என்ற மாயமானுக்கு வாக்களிப்பது எதிர்காலத்தில் எமது தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார இருப்பை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
