சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்: அமலநாயகிதெரிவிப்பு.

-மட்டக்களப்பு நிருபர்-

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழினத்தின் சார்பில் பா.அரியநேத்திரனை வேட்பாளராக களமிறக்கியுள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது சங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கொண்டுவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது,

யுத்தம் மௌனிக்கப்பட்டதனைத் தொடர்ந்து எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி சிங்களத் தலைமைகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இந்நிலையில் பல வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் எங்களுக்கான நீதி கிட்டவில்லை. இதனால் நாம் தினமும் அழுதழுதே எமது காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்து சர்வதேசத்தை வேண்டி நிற்கிறோம்.

இத்தகைய நிலையில் எமது தமிழினத்திற்காக சங்குப் பொதுச் சின்னத்தில் களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்குப் பொது அமைப்புக்கள்,மக்கள் மற்றும் தேசியம் சார்ந்த கட்சிகள் அனைத்தும் தமது பூரண ஆதரவை நல்கி சர்வதேசம் எம்மைத் திரும்பிப் பார்க்க வழிசமைத்திட வேண்டும்.

இந்நிலையில் 21000 காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி சங்கு சின்னத்திற்கு வாக்களிப்தன் ஊடாக சர்வதேசத்திற்கு சர்வதேசத்திற்கு உணர்த்த வேண்டுமென்றார்.

திருகோணமலை மாவட்டத் தலைவி செபஸ்டியான் தேவி தெரிவித்ததாவது:-

நாம் 15 வருடகாலமாக எமக்கு நீதி வேண்டி வீதியில் நின்று போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இதுவரை இலங்கை அரசாங்கம் சரியான தீர்வைத் தரவில்லை.

பேரினவாத ஜனாதிபதிகளுக்கு இதுவரை வாக்களித்தும் எதுவித பலனும் ஏற்படவில்லை. எனவே தமிழ்ப் பொது வேட்பாளரின் வரவு இன்றியமையாததாகக் காணப்பட்டது.

காணி அபகரிப்பு,சொத்து அபகரிப்பு போன்ற செயற்பாடுகளையே பேரினவாதிகள் செய்திருக்கிறார்கள். நாம் எமது போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து 200 தாய்மார்களை இழந்திருக்கிறோம்.

எங்களுக்கான நீதியைச் சர்வதேசம் பெற்றுத்தர வேண்டுமென்றார்.

அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி செல்வராணி தம்பிராசா தெரிவித்ததாவது:-

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் ஆதாரமாக பா.அரியநேத்திரன் களமிறக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு வடகிழக்குத் தமிழ் மக்கள் மட்டுமன்றி மலையகம் வாழ் தமிழ் உறவுகளும் ஒன்றிணைந்து வாக்களித்து எமது ஒற்றுமையை சர்வதேசத்துகு வெளிப்படுத்துவோமென்றார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்