நாளை முதல் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

நாளைய தினம் மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளைச் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 4ஆம், 6ஆம் திகதிகளில் சிரேஷ்ட உதவி மற்றும் உதவி பொலிஸ் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்களிப்பைப் பதிவு செய்ய முடியும்.

எதிர்வரும் 5ஆம், 6ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அஞ்சல் மூல வாக்குகளைக் குறித்த தினங்களில் செலுத்த முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிக்க மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்