
மனைவி மீது துப்பாக்கி பிரயோகம்: முன்னாள் இராணுவ வீரர் கைது
-பதுளை நிருபர்-
பதுளையில் நேற்று சனிக்கிழமை மாலை மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கரகஹ உல்பத நவஜனபதய ஹகுன்னாவ வெளிமடை பகுதியை சேர்ந்த 35 வயதுடையரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் 33 வயதுடைய குறித்த நபரின் மனைவி எனவும் குறித்த பெண்ணின் கையில் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பதுளை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் கொரியர் சேவையில் பணி புரிபவர் எனவும் பதுளை பசறை வீதியில் ஹிந்தகொட பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவருடன் காதல் உறவு பேணி வந்ததாகவும் இதை அறிந்த மனைவி குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே கணவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது குறித்த சந்தேக நபர் பயணித்த காரை சோதனைக்கு உட்படுத்திய போதே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் சொட் கண் (shot gun) துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 5 , (SFG) எஸ்.எஃப்.ஜி ரக கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த சந்தேக நபர் முன்னாள் இராணுவ வீரர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
