வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல்: வேனுடன் 4 பேர் கைது
வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், வேனுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்றவர்களை பெண்ணின் மாமியார் தடுக்க முயன்றுள்ளார். அவ்வேளை மாமியாரை உதைத்துத் தள்ளிவிட்டு சந்தேக நபர்கள் பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மாமியார் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அஹமட், பொலிஸ் சார்ஜன்ட் திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான தயாளன் (91792), ரணில் (81010) கால்கே (9200) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த வாகனம் சென்ற பாதையை பின் தொடர்ந்து சென்ற போது குறித்த வாகனத்தை பளைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளதுடன், குறித்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்த வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம், இருபாலை, சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்