
13ஆம் திருத்தச் சட்டத்தை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பு : சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்
13ஆம் திருத்தச் சட்டத்தை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அனைத்து மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துக்களும் கோரப்படும்.
மேலும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரையில் தற்போதைய அரசியல் யாப்பில் இருக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட அனைத்தும் அமுலாக்கப்படும்.
அத்துடன் மாகாண சபைகளுக்கான அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் ஜனாதிபதியால் தன்னிச்சையாக மீளப்பெறப்படாது என்றும் உறுதியளிக்கப்படுவதாகச் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பதவி ஏற்று ஆறு மாதங்களுக்குள் மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படுவதுடன், மாகாண சபைகள் அதிக நிதித்திறன் மற்றும் செயற்திறனுடன் இயங்குவதற்கான விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு, அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களைத் திறம்படச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவதுடன், பாதுகாப்புத் தேவைகளுக்குத் தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளை உடையவர்களுக்கு எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் அரச பதவிகளைப் பெறுவதற்கும் தடை விதிக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முறையான அதிகாரம் பெற்ற விசாரணை ஆணைக்குழு 3 மாதங்களுக்குள் நிறுவப்பட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தால் நாளாந்தம் வழக்கை விசாரணை செய்து தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய அரசின் இறப்புக்குப் பின்னரான தகனம் செய்த கொள்கைகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரியச் சட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர்களைப் பொறுப்புக்கூற வைத்தல்.
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை இரத்து செய்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சிறந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நிறுவுதல் போன்ற விடயங்களும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
