
காத்தான்குடி உணவகங்களில் கண்காணிப்பு : 9 உணவகங்கள் மற்றும் 45 ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை!
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜந்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான இரவு நேர கண்காணிப்பு நடவடிக்கை நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் தலைமையில், வைத்திய அதிகாரிகள், உணவு மருந்து பரிசோதகர்கள், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பரிசோதகர்கள் உட்பட 40 ற்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இவ் நடவடிக்கையில் பங்குபற்றியிருந்தது.
சுமார் 45 உணவகங்கள் இப்பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, 12 உணவகங்களில் பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், 9 உணவகங்களுக்கு எதிராகவும், முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு சான்றிதள் இன்றி உணவகங்களில் பணிபுரியும் 45 ஊழியர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடர்வதற்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் 5 உணவு கையாளும் நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கான உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இப்பரிசோதனை நடவடிக்கைகைளின் போது, உணவக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு உணவுப் பாதுகாப்பு முறைகள் தொடர்பான விழிப்பூட்டல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது .
எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரமானதும் பாதுகாப்பானதுமான உணவுகளை மக்களுக்கு கிடைக்க செய்வதினை உறுதிப்படுத்த, இவ்வாறான நடவடிக்கைகளை தொடரச்சியாக சுகாதார சேவைகள் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

