யானையின் தாக்குதலில் இருவர் பலி

-அம்பாறை நிருபர்-

நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் நேற்று புதக்கிழமை காலை 9 மணியளவில் யானை தாக்கி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

குறித்த நபர் வயல் வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2 இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவை சேர்ந்த திருமணமாகாத மீராலெப்பை முகம்மது முஸ்தபா (வயது – 62) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை மணல் அகழ்வு வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிந்தவூர் 21 ஆம் பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா நவாசிம் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்