காட்டு யானை தாக்குதல்: சாதாரண தர மாணவன் படுகாயம்

-மூதூர் நிருபர்-

மூதூர் – ஸ்ரீ நாராயணபுரம் பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.

கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்று வரும் ஜெயதீபன் கிருஷ்ணபிரசாத் (வயது – 16) என்ற மாணவரே படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் கிளிவெட்டி மகாவித்தியாலயத்திற்கு பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது ஸ்ரீ நாராயணர் ஆலயத்திற்கு முன்னால் வைத்து யானை தாக்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இரவு முதல் காட்டு யானைகளின் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததாகவும், நீண்டகாலமாக மூதூர் பகுதியில் காட்டு யானைகளினால் தொடர்ச்சியான பல தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புச் சம்பவங்களும் பதிவாகி வருவதோடு பயிர்களையும் சேதம் செய்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்