
தேர்தலுக்கான முன்னெடுப்புகளின் போது கட்சித்தாவல்கள் இடம்பெறுகின்றது : இம்ரான் மகரூப்
-மூதூர் நிருபர்-
நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னெடுப்புகளை சகல கட்சிகளும் முன்னெடுத்துவரும் நிலையில் கட்சித்தாவல்கள் இடம் பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
திருகோணமலை -தோப்பூரில் நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஒரு கட்சியில் இருந்தவர்கள் வேறொரு கட்சிக்கு மாறி பழைய கட்சிகளின் தலைவர்களை விமர்சிக்கின்ற நிலை தற்போது காணப்படுகிறது. அரசியலை மக்கள் வெறுக்கும் அளவிற்கு கட்சித் தாவல்கள் அதிகரித்துள்ளன.
இன்று மோசமான அரசியல் மாற்றத்தை காணக் கூடியதாக உள்ளது.இன்று ஜனாதிபதியோடு கைகோர்த்து பயணிப்பவர்கள் ஜனாதிபதியை கைது செய்யுமாறும்,அவர் ஒரு ஊழல்வாதி என்று அன்று சொன்னவர்கள்தான். இதனை எல்லாம் பார்க்கின்ற போது மக்கள் குழப்பமடைந்த நிலையில் உள்ளனர்.
வருகின்ற ஜனாதிபதி தேர்தல் மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுகின்ற தேர்தலாக இருக்குமே ஒழிய கட்சி தகவல்களை மேற்கொண்டவர்களின் கதைகளை கேட்டு மக்கள் வாக்களிக்கும் நிலையில் இல்லை என்பதை நிரூபிக்கும் தேர்தலாக அமையவுள்ளது.இத்தேர்தலில் கட்சி தாவல்களை மேற்கொண்டவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
2019 நடைபெற்ற தேர்தல் இனவாதத்தைக் கொண்டதாக அமைந்திருந்தது. தற்போது நடைபெறவிருக்கின்ற தேர்தல் சுபீட்சமிக்க நாட்டை உருவாக்கக்கூடிய தலைமைத்துவத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாக அமையவுள்ளது
சஜித் பிரேமதாஷ அவர்கள் எல்லா இடங்களையும் எல்லா மதங்களையும் எல்லா பிரதேசங்களையும் ஒன்றிணைத்து செயல்படக்கூடிய தலைவராக உள்ளார்.இதற்கு முன்னர் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் அமைதியாக இருந்தார்கள். எதிர்க்கட்சியில் இருந்தாலும் சேவைகள் செய்ய முடியும் என்பதை எமது கட்சியின் தலைவர சஜித் பிரேமதாச சேவைகள் ஊடாக நிரூபித்து காட்டியுள்ளார்.
நாடு வங்குரோத்து அடைந்திருந்த நிலையில் பாடசாலைகள் வைத்தியசாலைகளுக்கான உதவிகளை செய்தார்.இவர் நாளை ஜனாதிபதியானால் எவ்வாறு சேவை செய்வார் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.இன்று போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் சஜித் பிரேமதாஷ அவர்களை விமர்சிப்பவர்களாக காணப்படுகின்றனர்.மக்களின் தீர்மானம் அவர்களுக்கு விளங்கியுள்ளது அதனால்தான் விமர்சிக்கின்றார்கள்.சஜித் பிரேமதாஷவை தோற்கடிப்பதற்கான சதித்திட்டங்களை தான் மேற்கொள்கின்றார்கள்.
சஜித் பிரேமதாஷ ஜனாதிபதியாக வருகின்ற விடயம் என்பது நாட்டின் ஒற்றுமையை ஐக்கியத்தை ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டு செல்லும்.
கட்சித் தாவல்களை மேற்கொண்டவர்களுக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.அரசியல் லாபத்திற்காகவா ? அல்லது அவர்களின் சுய லாபத்திற்காகவா?அவர்களின் சொத்துக்களை வருமானங்களை அதிகரிப்பதற்கான கட்சித் தாவலா? என்பதை மக்கள் விளங்கி வருகின்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
