
IMF ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தால் நாட்டுக்கு கிடைக்கவுள்ள பணத்தை இழக்க நேரிடும்
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சில ஜனாதிபதி வேட்பாளர்கள் மேடைகளில் கூறிய போதிலும், அவ்வாறு செய்வதால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க நேரிடும் என்றும் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை நிபுணர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறைக்கு முக்கிய பங்கு உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் நிறுத்தப்பட்டதால் நிர்மாணத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வங்கிச் சலுகைகள் வழங்குதல், நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளைச் செலுத்துவது போன்ற இத்துறையில் பணிபுரிவோர் மீது சுமத்தப்பட்டிருந்த சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும் போது நிர்மாணத்துறையும் வளர்ச்சியடையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கொழும்பு, பிங்கிரிய, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய புதிய முதலீட்டு வலயங்களில் சுற்றுலா ஹோட்டல் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தல், பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொழும்பு, காலி மற்றும் கண்டியை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.
கேள்வி :
தாம் ஜனாதிபதியானால் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அனுரகுமார திஸாநாயக்கவும், சஜித் பிரேமதாசவும் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் ஒரு நாடாக நாம் என்னென்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும்?
பதில் :
அப்போது உங்கள் நிறுவனத்தை மூடுவேண்டி ஏற்படும். அவ்வளவுதான் நடக்கும். ஏனென்றால் நமக்கு ஒரு பொருளாதாரம் தேவை. சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளோம்.
கலந்துரையாடப்பட்ட இந்த கட்டமைப்பிற்குள் இருந்து, நாங்கள் இப்போது பிணைமுறிப் பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நமக்கான அளவுகோல்களை அவர்கள் வகுத்துத் தந்துள்ளனர். மேலும் இந்தியாவையும் மற்ற நாடுகளையும் பெரிஸ் கிளப்புக்கு அழைத்து கலந்துரையாடியுள்ளோம். சீனாவை தனியாக ஒருங்கிணைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இப்போது அந்தக் கலந்துரையாடல்கள் அனைத்தும் முடிந்துவிட்டதால், அந்த வழிமுறை இனி தேவையில்லை.
அவர்கள் எங்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளை நாங்கள் ஒப்புக்கொண்டோம். எக்ஸிம் வங்கியின் சலுகைகள், உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்களின் சலுகைகளிலிருந்து வேறுபட்டவை. பிணைமுறிப் பத்திரம் வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வழங்கும் நிவாரணம் மாறுபடும். சிலர் வட்டியைக் குறைக்கின்றனர். மற்றவர்கள் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிக்கிறார்கள்.
இவையனைத்தும் சேர்த்துப் பார்த்தால், பல்வேறு இடங்களிலிருந்து அதிக உணவைப் பெறும் சிறு பிள்ளையைப் போன்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவது சுனில் ஹதுன்னெத்தியா அல்லது ஹர்ஷ த சில்வாவா? என்பதை பாருங்கள்’’ என்று ஜனாதிபதி பதிலளித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
