இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனினால் சமூக சேவை செயற்பாடுகளுக்கான பொருட்கள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு முச்சக்கர வண்டி நலன்புரிச் சங்க நிர்வாகிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச சமூக சேவை செயற்பாடுகளுக்கான கூடாரம், கதிரைகள், ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனால் மேற்படி நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் குறித்த முச்சக்கர வண்டி நலம்புரி சங்கமானது மரண வீடுகளுக்கான இலவச செயல்திட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் தமது சேவையினை மேலும் விஸ்தரிக்கும் பொருட்டு மேற்படி உபகரணங்களைப் பெற்று தருமாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மேற்படி உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட 103 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜீவரன், இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், மகளிர் அணி செயலாளர் திருமதி சுசிகலா அருள்தாஸ், மட்டக்களப்புத் தொகுதி அமைப்பாளர் உருத்திரமூர்த்தி யுவநாதன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், முச்சக்கர வண்டி நரன்புரிச் சங்க நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்