அம்பாறை-திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தை இன்று புதன்கிழமை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக குறித்த பகுதியில் இல்மனைட் அகழ்வுக்கான ஆராய்வுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்வதற்கு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் மற்றும் புவிச்சரிதவியல் சுரங்கப் பணியகம்  கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திருக்கோவில் பிரதேசத்தின் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் அனுமதி பெறப்படவில்லை என்றும் அவர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.
இந்நிலையில் இன்று புதன்கிழமை மண் அகழ்விற்கு அனுமதி பெற்ற நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அங்கு வந்திருந்த போது மக்கள் அவர்களை தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் திருக்கோவில் பிரதேச செயலாளர் குறித்த பகுதிக்கு சென்று குறித்த இல்மனைட் அகழ்வை தடுக்கும் முளற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்