வரி உயர்வைத் தொடர்ந்து கசிப்பு நுகர்வு அதிகரிப்பு

வரி உயர்வைத் தொடர்ந்து சட்டவிரோத மதுபானம் நுகர்வு, குறிப்பாக ‘கசிப்பு’ நுகர்வு 19 வீதத்திலிருந்து 30 வீதமாக கணிசமானளவு அதிகரித்துள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, சட்டவிரோத மதுபானங்கள் சந்தைக்கு வந்தமையுடன், மதுபானத்தின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அரசின் வருவாய் ஈட்டும் மூன்றாவது முக்கிய துறையாக விளங்கும் இத்துறையானது 2024 வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி, இந்த ஆண்டு 232 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுவதை நோக்காக கொண்டுள்ளது.

அரசாங்கத்தினால் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

“சில மாவட்டங்களில் மதுபானங்களுக்கு அரசால் அனுமதி வழங்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் அரச அனுமதி பெற்ற மதுபான சாலையைக் கண்டுபிடிக்க மக்கள் குறைந்தபட்சம் 30 முதல் 40 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியுள்ளது.

ஆனாலும், சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் தொடர்ந்து இந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள்ன்றி செயல்படுகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜூலை 31, 2024க்குள் ரூ. 122 பில்லியன் அரசாங்க வருவாயாக வசூலிக்கப்பட்டது, இலக்கை அடைய மேலும் ரூ. 110 பில்லியன் தேவைப்படுகிறது.

இத்துறை சார்பில் இதுவரை ரூ. 1,750 மில்லியன் வசூலிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு மதுபான உரிமம் வழங்குவதன் மூலம் இனி 2,000 மில்லியன் ரூபாய் வசூலிக்க திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்