
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொது வேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்குகின்றார்?
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் களமிறங்கக் கூடும் என தமிழ் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் தற்போதைய முக்கிய போட்டியாளர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழர்களின் தரப்பில் பொதுவேட்பாளராக அரியநேத்திரன் அறிவிக்கப்பட உள்ளதாக ,உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இணையத்தள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலானது அடுத்த மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இணையத்தளத்தள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்; தெற்கே சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வடக்கு கிழக்கில் இந்தியா கை ஓங்கி நிற்கின்றது. இலங்கையை மையமாக வைத்து, பல்வேறு அரசியல் நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்தியா, சீனாவின் ஆதரவு எப்படி இருக்கும் என்பது விவாதிக்கப்பட்டும் வருகிறது. மகிந்த ராஜபக்சேவின் நாமல் ராஜபக்சேவும் அவரது ஒட்டுமொத்த குடும்பமே சீனாவை முழுமையாக நம்பக் கூடியது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் செலுத்தும் வாக்கு மிக முக்கியமானதாக, வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருந்து வந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்து தமிழருக்கான பிரதிநிதித்துவ தலைமை இல்லாத நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு வருகின்றன.
இந்தநிலையில் தமிழர்களின் பொதுவேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனை தமிழ் அரசியல் கட்சிகள் பொதுவேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

