மட்டக்களப்பு மாணவி விவகாரம் : ஆசிரியர் கைது!

மட்டக்களப்பில் பிரபல பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது இன்று புதன்கிழமை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவருக்கு, அதே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரான கோபிநாத் பாக்கியராஜ் என்பவர், பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக, கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு தலைமை பொலிசாரிடம் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் பிரதிகளுடன் பாடசாலை மாணவி ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகனை நேரில் சந்தித்து மோகன் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து குறித்த ஆசிரியரை கைது செய்யுமாறு மட்டக்கப்பு தலைமையகப் பொலிசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவின் பிரகாரம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட மாணவியும் ,மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மட்டக்களப்பு தலைமை பொலிஸாரால் பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோரின் வாக்மூலங்கள் பெறப்பட்டது.

இதையடுத்த மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , குற்றம் சாட்டப்பட்ட குறித்த ஆசிரியர் தலைமறைவாகியிருந்ததாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலிசாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினர் என்றும் , இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர் எனவும், ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.