பாம்பு பிடிப்பவரை கடித்த ராஜநாகம் மரணம்

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் சாகர் அருகே நரியவல்லி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், சாகர் -குரை சாலையில் உள்ள தடுப்புச் சுவர் அருகே இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜநாகம் ஒன்று இருப்பதாக, பாம்பு பிடி வீரர் சந்திரகுமார் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அவர் 5 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தார். பிடித்தபோது துள்ளிய ராஜநாகம் திடீரென அவரது பிடியில் இருந்து விலகி, அவரின் இரண்டு கட்டை விரல்களையும் கடித்தது.

இருப்பினும், அவர் பை ஒன்றில் ராஜநாகத்தை அடைத்துவிட்டார். இதனிடையே, அவரை பாம்பு கடித்துவிட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொதுவாக ராஜநாகம் கடித்தால் ஒரு சில நிமிடங்களில் மரணம் ஏற்பட்டு விடும் என்றாலும், மன தைரியத்துடன் இருந்தால் மேலும் சில நிமிடங்கள் தாக்குப் பிடிக்கலாம். அதற்குள் சரியான விஷ முறிவு மருந்தை கொடுத்துவிட்டால் காப்பாற்றிவிடலாம். அதனடிப்படையில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியில் இருக்கும் சந்திரகுமார் மன தைரியத்துடன் இருந்ததால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்ந குறித்த பாம்புப்பிடி வீரர் தன்னை பாம்பு கடித்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, அவரை கடித்த ராஜநாகம் அதே இடத்தில் இறந்து கிடந்தது. ஏனெனில், பாம்பை பிடித்த சந்திரகுமார் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டார். அவரை சுற்றியிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ராஜநாகம் அருகே நெருங்க யாரும் நினைக்கவில்லை. அதே நேரத்தில் பிளாஸ்டிக் பையில் இருந்து ராஜநாகமும் வெளியேறத் தெரியாமல் அதிலேயே இறந்துவிட்டது.

2 வாரத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது பலருக்கும் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வனத்துறையினரும் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்