
சில்லிலிருந்து காற்றை வெளியேற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்: விசாரணை ஆரம்பம்
வத்தளையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் சில்லிருந்து காற்றை வெளியேற்றிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
மாபோல பகுதியிலுள்ள கொள்கலன் முனையம் ஒன்றுக்கு பிரவேசித்த பாரவூர்தியொன்று சாரதியின்றி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் அதன் முன்பக்க சில்லிலிருந்து காற்றை வெளியேற்றியமை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தமையினால் குறித்த வாகனத்தின் சில்லில் இருந்த காற்றை வெளியேற்றியதாகச் சம்பவத்துடன், தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது அங்கு வந்த குறித்த வாகனத்தின் சாரதி தாம் சில ஆவணங்களைக் கையளிப்பதற்காகவே கொள்கலன் முனையத்துக்குச் சென்றிருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் அபராத பத்திரம் வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்திற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
