தங்கநகர் யுவதி படுகொலை: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

-மூதூர் நிருபர்-

சேருவில – தங்கநகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்காக மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த ஏழு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் 3ஆம், 6ஆம் எதிரிகளுக்கு பிணை விண்ணப்பம்கோரி சமர்ப்பணம் செய்திருந்தனர். குறித்த விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி குறித்த எதிரிகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் பிணை விண்ணப்பமானது உயர் நீதிமன்றத்தினாலேயே பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்து பிணை விண்ணப்பத்தினை நிராகரித்து குறித்த சந்தேக நபர்களுக்கு மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கநகரைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம் பெண்ணின் சடலம் கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாகவுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த யூலை மாதம் 5ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த யுவதியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குறித்த யுவதியின் காதலன், அவரது தந்தை, சகோதரி, சிறிய தந்தை, வீட்டு வேலைக்காறன் மற்றும் ஜே.சி.பி வாகனத்துடன் தொடர்புடைய இருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கபப்ட்டுள்ளனர்.

குறித்த வழக்கானது கடந்த யூலை மாதம் 19ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வழக்கு தொடுனரான மூதூர் பொலிசார் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் நான்கு பேரை குறித்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சமர்ப்பணம் செய்திருந்தனர். இதலில் திருப்தி கொள்ளாத நீதிமன்றம் குறித்த வழக்கை திருகோணமலை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றியிருந்ததோடு குறித்த ஏழு நபர்களுக்கும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்