இராஜாங்க அமைச்சரின் செயலாளர் இலஞ்சம் பெறும் போது கைது?

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை வழங்குவதற்காக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றிடமிருந்து 60 இலட்சம் இலஞ்சமாக கோரப்பட்ட நிலையில், இன்று 15 இலட்சம் பெறப்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகளுக்காக பொலநறுவைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக சந்தேகநபர்கள் இலஞ்சம் கோரியுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரையும் அமைச்சரின் அலுவலகத்தையும் தொடர்புகொண்டு உறுதிப்படுத்த முயன்ற போது அவர்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சராக இருக்கும் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் மண் அகழ்வு மற்றும் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுத்திருந்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னை மீறி ஒருபிடி மண்ணையும் யாராலும் கொண்டு செல்ல முடியாது என்றும் பல இடங்களிலும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது செயலாளர் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கி இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பல இணையத்தள செய்திகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து சமூக ஊடகங்களிலும் பல்வேறு கருத்துக்கள் சமூக ஆர்வலர்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்