எரிக்கப்படும் வைத்திய கழிவுகளினால் மாசடையும் சுற்றுச்சூழல்: பொது மக்கள் விசனம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை வைத்தியசாலையில் எரிக்கப்படுகின்ற வைத்திய கழிவுகளினால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக பொது மக்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வைத்தியசாலையில் கழிவுப் பொருட்களை எரிக்கின்ற இயந்திரப்பகுதியின் புகைபோக்கியானது ஒரு வருடத்திற்கு மேலாக உடைந்துள்ள நிலையில் அது திருத்தப்படாமல் குறித்த பகுதியில் வைத்தியசாலைக் கழிவுகள் எரிக்கப்பட்டு வருவதானாலேயே இந்த மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியேறுகின்ற புகையானது வைத்தியசாலை உட்பட அதனை அண்டிய பகுதிகளிலும் வளி மாசடைவதை ஏற்படுத்துவதோடு வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள், திருகோணமலை கடற்கரையை நோக்கி வருகின்ற உல்லாச பயணிகள் உட்பட அயலில் உள்ள மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் வைத்தியசாலையின் நச்சுத் தன்மை மிக்க மருந்துக்கழிவுகள், சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்படுகின்ற உடற்பாகங்கள், பிளாஸ்டிப் பொருட்கள் போன்ற பல பொருட்கள் எரிக்கப்படுவதாகவும் ஆரம்பத்தில் குறித்த புகையானது 60 அடி உயரமான புகைபோக்கியின் மூலம் மேல் வளிக்கு விடுவிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது 40 அடி உயரமான புகைபோக்கி உடைந்துள்ள நிலையில் அதனை சீர் செய்யாமல் கழிவுப் பொருட்கள் எரிக்கப்பட்டு வருவதனால் சூழல் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக பலரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றும் இதுவரை இது சீர் செய்யப்படவில்லை எனவும் பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்