பேருந்தில் சக பெண் பயணிக்கு அறிமுகமாகி, வீட்டுக்குச் சென்று கொள்ளையிட்ட பெண்

வாதுவை, மெலேகம பிரதேசத்திலுள்ள பெண்ணொருவருடன் பேருந்துப் பயணத்தின்போது அறிமுகமாகி, நட்பாக பழகிய சக பெண் பயணி, அப்பெண்ணின் வீட்டுக்கே சென்று தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் தெரிவிப்பதாவது:

கதிர்காமம் – கொழும்பு பேருந்தில் பயணித்த பெண்ணொருவர், அதே பேருந்தில் பயணித்த, நகை திருட்டுகளில் ஈடுபடும் சக பெண்பயணியுடன் நட்பாக பேசிப் பழகியுள்ளார்.

சந்தேக நபர், அந்த பெண்ணின் மகனுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் சற்று நேரம் கழித்து, தனக்கு குடிப்பதற்கு ஏதேனும் தருமாறு அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

பருகுவதற்கு தேநீர் தயாரிக்கும் போது சந்தேக நபர் வீடு முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபருடன் இணைந்து தேநீரை அருந்திய அந்த பெண் திடீரென மயங்கியுள்ளார்.

அதன் பின்னரே சந்தேக நபர் வீட்டிலிருந்த 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்று, முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்