
-சௌமினி சுதந்தராஜ்-
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையான தன்சல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பில் அண்மையில் வெசாக் தினத்தன்று ஐஸ்கிறீம் தன்சல் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பை சேர்ந்த மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கடந்த காலங்களில் பல சர்ச்சைக்களை ஏற்படுத்திய காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெசாக் தினத்தன்று குறித்த சர்ச்சைக்குரிய காணொளியுடன் தொடர்புடையதாக கருதப்படும் மதகுருவினை தொடர்புபடுத்தியதாக அமைந்த தன்சல் புகைப்படத்தினையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த கருத்துக்களை பல்வேறு நபர்கள் தங்களது தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன் சில போலி முகநூல் கணக்குகளிலும் காணக்கூடியதாகவுள்ளது.
குறித்த புகைப்படங்கள் தனிப்பட்ட நபர்களின் முகம் தெரிவது போன்று அமைந்துள்ள அதேவேளை மிகவும் மோசமான கருத்துக்களை பகிர்வதன் காரணத்தினால் குறித்த புகைப்படத்தில் இருக்கும் தனிப்பட்ட நபரின் மனநிலை பாதிக்கப்படுவதுடன் அவர்களை தவறான முடிவு எடுக்க தூண்டுதலாகவும் அமையும்.
இதேவேளை சில போலி முகநூல் பக்கங்களை வைத்துள்ள முகம் தெரியாத நபர்கள் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை பதிவிடும் போதும் புகைப்படங்களை பதிவிடும் போதும் உரிய நபரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது முகம் தெரியாதவாறு பதிவு செய்யப்பட வேண்டும்.
தங்களது தனிப்பட்ட கோபங்களை வெளிப்படுத்துவதற்காக பொதுமக்களின் புகைப்படத்தினை பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் குழந்தை ஒன்று தவறுதலாக பால்கனியில் இருந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது. எனினும் குறித்த குழந்தையினை அயலவர்கள் இணைந்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இதன்போது இணையவாசிகளில் பலர் குறித்த குழந்தையின் தாயை பற்றி பல்வேறுவகையில் விமர்சித்தனர். இதன் விளைவாக குறித்த குடும்பம் அவர்களது சொந்த ஊருக்கு சென்றதோடு நின்றுவிடாமல் தாய் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை இங்கு சுட்டிகாட்டத்தக்கது.
இவ்வாறு இணையத்தில் வைரலாகி வரும் சில காணொளிகள் மற்றும் புகைப்படங்களால் அவற்றுடன் சம்பந்தப்பட நபர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளமையினால் இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

