
மீன்பிடிக்கச் சென்றவரை இழுத்து சென்ற முதலை
-பதுளை நிருபர்-
கொஸ்லந்த பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் இன்று புதன் கிழமை காலை முதலை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.
அதிலிவெவ பிரதேசத்தில் வசிக்கும் மீனவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
உமா ஓயா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் அளுத்வெல சிறு நீர்த்தேக்கத்தில் இன்று அதிகாலை மீன்பிடிக்கச்சென்ற நபரை முதலை இழுத்து சென்றதாக அவருடன் மீன் பிடிக்க சென்ற சக நண்பரால் கொஸ்லாந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்மூழ்கி வீரர்களின் உதவியை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
