பண்டிகை காலத்தில் உள்ளூர் முட்டை 35 ரூபாய்க்கு?

அடுத்த மாதத்தில் உள்நாட்டு முட்டை ஒன்றினை 35 ரூபாவிற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பண்டிகை காலத்தில் உள்நாட்டு முட்டை ஒன்றின் விலை 42 ரூபாய் முதல் 48 ரூபாய் வரையில் நிலவும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விட குறைந்த விலையில் உள்ளூர் முட்டைகள் காணப்படுவதனால் அவை அதிகளவில் நுகரப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் உள்நாட்டு முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்யப்பட்டது.

எனினும் தற்போது உள்ளூர் முட்டைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவிற்கு கீழ் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விசேடமாக பண்டிகை காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவற்றை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.