திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகள் வழமைக்கு

 

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையானது 17 நாட்களின் பின்னர் இன்று வியாழக்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலாராணி இஸ்ஷதீன் நேற்று புதன் கிழமை தெரிவித்துள்ளார்.

திருக்கோவிலில் மரதன் ஓடிய பின்னர் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக சிகிச்சைகள் பலனின்றிய நிலையில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக கடந்த 11ஆம் திகதி முதல் வைத்தியசாலையின் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக வைத்திய சேவைகள் முழுமையாக இடை நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியாக தொடர்ந்து இடம்பெற்று வந்த பல்வேறுபட்ட சுற்றுப் பேச்சுவார்தைகள் மற்றும் பொலிசாரின் துரித சட்ட நடவடிக்கைகள் காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருந்தன.

இதனையடுத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினருக்கும் இடையில் நேற்று  பிற்பகல் வேளையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு நேற்று புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பூரணமான வைத்திய சேவைகள் இன்று வியாழக்கிழமை தொடக்கம் வழமை போல் இடம்பெறும் என நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டு இருந்த அதேவேளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரினால் உத்தியோகபூர்வமாக கடிதமும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வழங்கி வைக்கப்பட்டு இருந்தது.

இக்கலந்தரையாடல் கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் பிரதேச மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் வைத்தியர்கள் மதகுருமார்கள் அபிவிருத்தி குழு நிருவாகிகள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.