சிறுவர்-மகளிர் துஷ்பிரயோகம் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்

நடப்பாண்டின் கடந்த 3 மாதங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு 1,077 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

477 முறைப்பாடுகளில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் மேலும் 42 முறைப்பாடுகளுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 550 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 24 மணித்தியாலங்களும் 109 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை, குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலைமைகள், கட்டாய உழைப்பு, இணையவழி குற்றங்கள் அல்லது வேறு ஏதேனும் துஷ்பிரயோகம் குறித்த புகார்களை அந்த தொலைபேசி எண்ணினுடாக மேற்கொள்ளலாம்.

பொலிஸாரிடம் வந்து முறைப்பாடு செய்வதில் சிரமம் உள்ள எவரும் அந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சகல தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.