பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதித்தாலும் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதிக்கிறார்கள் அதிக எண்ணிக்கையிலும் பணியாற்றுகிறார்கள் ஆனாலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதானிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா முரளீதரன் தெரிவித்தார்.

மகளிரைக் கௌரவித்து ஊக்கமளிக்கும் நிகழ்வு இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையோடு வாகரைப் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் வாகரைப் பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

பல்வேறு பரிமாணங்களில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திப் பறைசாற்றி நிற்கும் சாதனைப் பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களைக் கௌரவித்து ஊக்கமளிக்கும் இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பிரதேசத்தின் பல்துறைச் சாதனைப் பெண்களும் அரங்கில் பாராட்டப்பட்டனர்.
மகளிரைக் கௌரவிக்கும் நிகழ்வில் கூடவே நடனம், விழிப்புணர்வு நாடகம், பாடல் உட்பட கலை அம்சங்கள் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பங்குபற்றித் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

மேலும், தொழில்முயற்சியாண்மைக்காக சுய தொழில் ஊக்குவிப்புக் கடன் தொகையும் பல பெண்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.