
சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை
-அம்பாறை நிருபர்-
சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமினால் சம்மாந்துறை வைத்தியசாலையின் புதிய கட்டடத்தினை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய சனிக்கிழமை மாலை சம்மாந்துறை வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினருடன் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டனர்.
இதன் போது குறித்த வைத்தியசாலையின் புதிய கட்டட நிர்மாணங்களை பார்வையிட்ட சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி மஹிபால தலைமையிலான அதிகாரிகள் பாராட்டியதுடன் வைத்தியசாலையின் இரண்டாம் கட்டமாக பல மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவ்விடத்தில் உறுதியளித்தார்.
மேற்குறித்த களவிஜயத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எச்.எம் ஆசாத் ஹனீபா, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்தியர் ஏ.ஆர் . நியாஸ் அஹமட் ,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம். சீ. எம். மாஹிர், உள்ளிட்ட பிரிவு தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


