
மட்டக்களப்பை சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவன பணியாளர் வீதி விபத்தில் மரணம்
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின்பணியாளர் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பலியானதாக மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாதுறை உமாமில் வீதியைச்சேர்ந்த தம்பிநாயகம் சிறிபாலு (வயது – 55) என்ற 3 பிள்ளைகளின் தந்தையான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடமை நிமித்தம் வெளியில் சென்று மட்டக்களப்பு – பதுளைவீதியால் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது முதிரையடி ஏற்றம் எனும் இடத்தில் பழுது பார்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை ஏற்றியிறக்கும் திண்மக் கழிவகற்றல் கிடங்கின் லொறியொன்றில் மோதுண்டு ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச்சென்ற கரடியனாறுபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சடலம் சட்ட வைத்திய உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரணவிசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிகவிசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
