
மட்டக்களப்பு இளைஞன் வாகன விபத்தில் மரணம்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு, செங்கலடி,கணபதிப்பிள்ளை நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மதுசாந் (வயது – 22) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த இருவர் திருகோணமலைக்கு வந்து மீண்டும் மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதியதிலேயே விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

